இம்முறை கோப்பையை இந்த அணி தான் வெல்லும் - சுரேஷ் ரெய்னா!

Updated: Sun, May 29 2022 13:06 IST
Image Source: Google

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 15ஆவது ஐபிஎல் தொடரானது இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய இந்த ஐபிஎல் தொடரானது இன்று மே 29ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்றுடன் கோலாகலமாக நிறைவு பெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் ஏற்கனவே முதலாவது குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்திய குஜராத் அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தேர்வானது.

அதைத்தொடர்ந்து இரண்டாவது குவாலிபயர் ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு துவங்க இருக்கும் இந்த போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற போவது யார்? என்கிற எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ள நிலையில் பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்த போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற போகும் அணி எது? என்பது குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா இன்றைய போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது என்பது குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “என்னை பொறுத்தவரை இறுதிப்போட்டியில் குஜராத் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் ராஜஸ்தானை விட அதிகம் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் ஏற்கனவே முதலாவது குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்திய பின்னர் 4 முதல் 5 நாட்கள் வரை அவர்களுக்கு நல்ல ஓய்வு கிடைத்துள்ளது. 

அதோடு அவர்களுக்கு தேவையான பயிற்சிகளையும் இந்த இடைப்பட்ட நாட்களில் எடுத்திருப்பார்கள். ஆனால் அதேவேளையில் ராஜஸ்தான் அணியோ அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடி வருகிறது. இருப்பினும் அவர்கள் நல்ல பார்முடன் விளையாடி வருகிறார்கள்.

குறிப்பாக இறுதிப் போட்டியில் பட்லர் மட்டும் சிறப்பாக விளையாடி விட்டால் அது அந்த அணிக்கு கூடுதல் பலத்தை தரும். குஜராத் அணி ஒரு அடி ராஜஸ்தான் அணியை விட முன்னர் இருந்தாலும் அவர்கள் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டிய நிலை வரும். ஏனெனில் ராஜஸ்தான் அணியும் அவர்களை எளிதில் வெற்றி பெற விடமாட்டார்கள். நிச்சயம் இந்த போட்டி மிக சுவாரசியமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை” என  கூறியுள்ளார்.

இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டங்களை பொறுத்தவரையிலும் குஜராத் அணியே அதிகமுறை வெற்றி பெற்றுள்ளதால் புள்ளி விவர அடிப்படையிலும் குஜராத் அணி முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை