தவானுடன் இவர் தான் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!

Updated: Thu, Jul 21 2022 22:24 IST
I Think Ruturaj Should Make His ODI Debut and Open with Shikhar - Wasim Jaffer (Image Source: Google)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் ஷிகர் தவான் தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி களமிறங்குகிறது. அதை நிக்கோலஸ் பூரன் தலைமையில் ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப் போன்ற நல்ல திறமையுடைய வீரர்களைக் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் சொந்த மண்ணில் எதிர்கொள்வதால் இது தொடர்பாக இரு நாட்டுகளை ரசிகர்களிடமும்ம் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது

இந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவருமே இல்லாத நிலைமையில் கேப்டன் ஷிகர் தவான் முதல் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். அவருடன் ஜோடியாக களமிறங்க இஷான் கிஷன், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், ருதுராஜ் கைக்வாட் போன்ற வீரர்களுடன் சமீபத்திய அயர்லாந்து தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி பட்டைய கிளப்பி சதமடித்த தீபக் ஹூடாவும் போட்டியில் உள்ளார். இப்படி ஷிகர் தவானுடன் களமிறங்க 4 வீரர்கள் போட்டி போடுவதால் அதில் யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் அணி நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் சமீப காலங்களில் தேர்வுக் குழுவால் அநீதி இழைக்கப்படும் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இதற்கு முந்தைய காலங்களில் நிறைய போட்டிகளில் தீபக் ஹூடா மிடில் ஆர்டரில் விளையாடியதால் இத்தொடரில் அவருக்கு மிடில் ஆர்டரில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது. மேலும் விராட் கோலி இல்லாததால் அவரின் இடத்தில் சுப்மன் கில் பொருந்துவார் என்ற நிலைமையில் சமீபத்திய தென் ஆப்பிரிக்க தொடரில் அசத்திய இஷான் கிசான் விக்கெட் கீப்பராகவும் தொடக்க வீரராகவும் ஷிகர் தவானுடன் களமிறங்குவதற்கே வாய்ப்புகள் அதிகமாக தென்படுகிறது.

ஆனால் அவர்களுக்கு இடையேயான போட்டியில் ருதுராஜ் கைக்வாட் சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டதால் இப்போட்டியில் வாய்ப்பு கிடைக்காது என்றே அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் ஐபிஎல் 2021 தொடரில் 633 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று சென்னை 4-வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் நிறைய போட்டிகளில் டக் அவுட்டாகி சுமாராக செயல்பட்டார். மேலும் சமீபத்திய தென் ஆப்ரிக்க டி20 தொடரில் இஷான் கிசனுடன் களமிறங்கிய அவர் 1 அரை சதம் மட்டுமே அடித்து எஞ்சிய 2 போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதனால் அவருக்கு இந்த தொடரில் வாய்ப்பளிக்க ரசிகர்கள் கூட விரும்பவில்லை. இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்ட அவர் ஷிகர் தவானுடன் களமிறங்க தகுதியானவர் என்று முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் கோரிக்கை வைத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாக களமிறங்கி ஷிகர் தவானுடன் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று நினைக்கிறேன். விஜய் ஹசாரே கோப்பையில் 5 இன்னிங்சில் 4 சதங்களை அடித்த அவர் இந்த வாய்ப்புக்கு தகுதியானவர். அத்துடன் இந்த ஜோடி இடது – வலது கை ஜோடியாகவும் அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை