ஐபிஎல் 2024: சாம் கரனை கடுமையாக சாடிய வீரேந்திர சேவாக்!

Updated: Mon, Apr 22 2024 15:11 IST
Image Source: Google

பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று சண்டிகரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், நடு ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பியதால் 20 ஓவர்கள் முடிவில் 142 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரப்ஷிம்ரன் சிங் 35 ரன்களையும், ஹர்ப்ரீத் பிரார் 29 ரன்களையும் சேர்த்தனர். குஜராத் அணி தரப்பில் சாய் கிஷோய் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் விருத்திமான் சஹா 13 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஷுப்மன் கில் - சாய் சுதர்ஷன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஷுப்மன் கில் 35 ரன்களையும், சாய் சுதர்ஷன் 31 ரன்களையும் சேர்க்க, இறுதியில் அபாரமாக விளையாடிய ராகுல் திவேத்தியா 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்நிலையில் இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட சாம் கரணை முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய சேவாக்,  “ஒருவேளை நான் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகத்தில் இருந்தால் அவரை எனது அணியில் கூட எடுத்திருக்க மாட்டேன். பேட்டிங் ஆல் ரவுண்டர் அல்லது பவுலிங் ஆல் ரவுண்டர் ஆகிய எந்த வேலைக்கும் அவரை நிச்சயம் நான் தேர்வு செய்திருக்க மாட்டேன்.

கொஞ்சமாக மட்டும் பந்து வீசி, பேட்டிங் செய்யும் அவரைப் போன்ற வீரரால் எந்த பயனுமில்லை. ஒன்று நீங்கள் நன்றாக பேட்டிங் செய்து வெற்றியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் அல்லது அபாரமாக பந்து வீசி போட்டியில் வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் இது எதையும் சரியாக செய்யாத சாம் கரண் போன்ற வீரரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று காட்டமாக தெரிவித்துள்ளார். 

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 இன்னிங்ஸின் விளையாடியுள்ள சாம் கரண் , பேட்டிங்கில் 152 ரன்களையும், பந்துவீச்சில் 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மேலும் கடந்த சில போட்டிகளாக அணியின் கேப்டன் ஷிகர் தவான் காயம் காரணமாக இடம்பெறாத நிலையில், சாம் கரண் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை