ஐசிசி உலகக்கோப்பை 2023: ஜடேஜா சுழலில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான் இந்திய அணியும், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான லீக் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம்போல கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆரம்பம் முதலே பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித்தள்ளிய அவர் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில்லும் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
TRENDING
நான் விளையாடிய மிகவும் திருப்திகரமான ஒருநாள் போட்டி - ஆடம் ஸாம்பா!
பின்னர் ஜோடி சேர்ந்த் விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இப்போட்டியில் தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன, 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்தனர்.
அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 77 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய கேஎல் ராகுல் 8 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் 22 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். ஆனால் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 49ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சாதனையை விராட் கோலி சமன்செய்த்ததுடன், குறைந்த இன்னிங்ஸில் 49 ரன்களை விளாசிய வீரர் எனும் சாதனையை தனவசப்படுத்தியுள்ளார். இதன்மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்களைக் குவித்துள்ளது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 101 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லுங்கி இங்கிடி, மார்கோ ஜான்சென், காகிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி வழக்கம் போல் சேஸிங்கில் படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. அணியின் தொடக்க வீரர் குயின்டன் டி காக் 4 ரன்களில் பெவிலியன் திரும்ப, அடுத்து கேப்டன் டெம்பா பவுமா 11 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார்.
அதன்பின். ரஸ்ஸின் வெண்டர் டுசென் 11 ரன்களுக்கும், ஐடன் மார்க்ரம் 9 ரன்களுக்கும் என முகமது ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அதனைத்தொடர்ந்து ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், கேசவ் மகாராஜ், காகிசோ ரபாடா ஆகியோரது விக்கெட்டுகளை ரவீந்திர ஜடேஜா கைப்பற்றி, தனது 5 விக்கெட்டையும் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் வந்த வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்கா அணி 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.