ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அசுர வளர்ச்சியில் ரிஷப், அஸ்வின்!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் ரிஷப் பந்த், சர்வதேச டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
Body: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை, இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் கேன் வில்லியம்சன் முதலிடத்தையும், ஸ்டீவ் ஸ்மித் இரண்டாம் இடத்தையும், மார்னஸ் லபுசாக்னே மூன்றாமிடத்தையும் தக்கவைத்துள்ளனர்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஐந்தாம் இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இப்பட்டியலில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா ஒரு இடம் முன்னேறியும், ரிஷப் பந்த் 7 இடங்கள் முன்னேறியும் 7ஆவது இடத்தைப் பகிர்ந்துள்ளனர்.
பந்துவீச்சாளர் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்துவருகிறார். இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு இடம் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்தின் நெய்ல் வாக்னர் ஒரு இடம் பின்தங்கி மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.