ஐசிசி டெஸ்ட் தரவரிசை: மீண்டும் முதலிடத்தில் வில்லியம்சன்; கான்வே அபார வளர்ச்சி!
ஒவ்வொரு டெஸ்ட் தொடர் முடிந்த பிறகும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அணிகள், வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது டெஸ்ட் பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள், ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
இதில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 901 புள்ளிகளைப் பெற்று, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இப்பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 4ஆவது இடத்திலும், ரோஹித் சர்மா 6 ஆவது இடத்தையும், ரிஷப் பந்த் 7ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
மேலும் இங்கிலாந்து அணிக்கெதிரான அறிமுக டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்த டேவன் கான்வே 18 இடங்கள் முன்னேறி 43ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
பந்துவீச்சளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் முதலிடத்திலும், இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் 2ஆவது இடத்திலும் நீடித்து வருகின்றனர். அதேபோல் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜெமிசன் 13ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜாவை பின்னுக்குத் தள்ளி, வெஸ்ட் இண்டீஸின் ஜேசன் ஹோல்டர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதில் பென் ஸ்டோக்ஸ் இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறார்.