ஐசிசி டெஸ்ட் தரவரிசை: புதிய உச்சம் தொட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஆஸ்திரேலிய அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சமீபத்தில் நடபெற்று முடிந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதியடுத்து இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் முன்னேற்றம் கண்டிருந்தாலும், ஆஸ்திரேலிய அணி பேட்டர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். அதன்படி ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷாக்னே ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
அதன்படி பேட்டர்கள் தரவரிசையில் கேன் வில்லியம்சன் முதலிடத்தில் நீடிக்கும் நிலையில், இங்கிலாந்தின் ஜோ ரூட் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் இரண்டாம் இடத்தில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் ஒரு இடம் பின் தங்கி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேசமயம் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். இதன்மூலம் இந்திய வீரர் விராட் கோலியை (08) தொடர்ந்து ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் டாப் 10-க்குள் இரண்டாவது இந்திய வீரராக இடம்பிடித்துள்ளார். அதேபோல் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் 2 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 11ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தொடர்ந்து முதல் இரு இடங்களை தக்கவைத்துள்ளனர். நியூசிலாந்து தொடரில் சிறப்பாக பந்துவீசிய ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹசில்வுட் 4ஆம் இடத்திற்கும், நாதன் லையன் 6ஆம் இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். அதேசமயம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேலும் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி வீரர் கிளென் பிலிப்ஸ் அரைசதம் கடந்ததுடன், 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலல் டெஸ்ட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் 12 இடங்கள் முன்னேறி 12ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இப்பட்டியலின் முதல் இரண்டு இடங்களில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இருப்பது குறிப்பிடத்தக்கது.