அண்டர் 19 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்று உள்ளது. தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, உகாண்டா ஆகிய நாடுகள் அந்த பிரிவில் இடம் பெற்று உள்ளன.
இந்திய அணி நேற்று தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. கயானாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது.
முதலில் விளையாடிய இந்திய அணி, 46.5 ஓவர்கள் முடிவில் 232 ரன்கள் அடித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் யாஷ் துல் 82 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரர் கௌஷல் தம்பே 35 ரன்கள் அடித்தார்.
அதன்பின் 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 45.4 ஓவர்கள் முடிவில் 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய பந்து வீச்சாளர் விக்கி ஓஸ்ட்வால் 5 விக்கெட்களையும், ராஜ்பாவா 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் இந்திய அண்டர் 19 அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அண்டர் 19 அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய விக்கி ஓஸ்ட்வால் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.