அண்டர் 19 உலகக்கோப்பை: ஆஸியை பந்தாடி சரித்திரம் படைத்தது இந்தியா!

Updated: Thu, Feb 03 2022 11:51 IST
Image Source: Google

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 

அண்ட19 உலகக்கோப்பை தொடரின் நடப்பு சீசன் வெஸ்ட் இண்டீஸில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கெனெவே இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதியில் மோதின.

அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்களைக் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆங்கிரீஷ் ரகுவன்ஷி 6 ரன்களிலும், ஹரூன் சிங் 16 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து ஜோடி சேர்ந்த ஷேக் ரஷீத் - கேப்டன் யாஷ் துல் இணை பட்டையைக் கிளப்பியது. ஷேக் ரஷீத் 94 ரன்களைக் குவித்தார். அட்டகாச சதமடித்த கேப்டன் யாஷ் துல் 110 ரன்களைக் குவித்தார். இவர்கள் இருவரும் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றனர்.

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, ஆரம்பம் முதலே இந்தியப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. 41.5 ஓவர்களில் 194 ரன்கள் மட்டுமே எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லச்லன் ஷா 51 ரன்களையும், கோரே மில்லர் 38 ரன்களையும், கேம்பல் கெல்லவே 30 ரன்களையும் சேர்த்தனர்.

இந்திய தரப்பில் விக்கி ஒஸ்ட்வால் 3 விக்கெட்டுகளையும், ரவிகுமார், நிஷாந்த் சிந்து தலா 2 விக்கெட்டுகளையும், கவுஷல் தம்பே, ஆங்கிரிஷ் ரகுவன்ஷி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இப்போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றிக்குத் துணைநின்ற இந்திய கேப்டன் யாஷ் குல் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நேருக்கு நேர் மோதுதியது இது மூன்றாவது முறையாகும். 2018இல் பிருத்வி ஷா தலைமையில் மோதியபோது இந்தியாவே வெற்றிபெற்றது. 2020இல் காலிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது; அப்போதும் இந்தியாவே வென்றது. இந்நிலையில், ஆண்டிகுவா தீவுகளில் நடந்த இந்த ஆண்டின் உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை சாய்த்திருக்கிறது இந்தியா.

மிகுந்த உத்வேகத்துடன் வெற்றிகளைக் குவித்து வரும் இந்திய அணியின் இந்த இளம்படை தனது இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி உலகக் கோப்பையும் கைப்பற்றும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை