மகளிர் உலகக்கோப்பை 2022: அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா?

Updated: Thu, Mar 24 2022 14:23 IST
ICC Women’s World Cup 2022: How Can Indian Team Qualify For Semi-Final Stage (Image Source: Google)

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேனான ஆட்டம் மழையால் ரத்தானது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றாலும் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

வெலிங்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் மழை காரணமாக இரு அணிகளுக்கு இடையிலான முக்கியமான ஆட்டம் 26 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா அணி 10.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 61 ரன்களை எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் ரத்தானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன.

இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி 9 புள்ளிகளுடன் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 7 ஆட்டங்களில் 7 புள்ளிகளைக் கொண்டுள்ளது. இதர அணிகளின் வெற்றி, தோல்வியின் அடிப்படையில் அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும். இங்கிலாந்தும் இந்திய அணியும் தங்களது கடைசி ஆட்டங்களில் தோல்வியடைந்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்று விடும். 

இன்று மழை பெய்யாமல் தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியிருந்தால் இந்திய அணி கடைசி ஆட்டத்துக்கு முன்பே அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கும். கடைசி ஆட்டத்தில் தோற்றிருந்தாலும் பிரச்னை எதுவும் ஆகியிருக்காது. 

மழையால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது தென் ஆப்பிரிக்க அணிக்குச் சாதகமாகி விட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் புது நம்பிக்கையைத் தந்துள்ளது. 

லீக் சுற்றின் கடைசி இரு ஆட்டங்களில் இங்கிலாந்து வங்கதேசத்துக்கு எதிராகவும் இந்தியா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் மோதவுள்ளன. இங்கிலாந்து அணி வங்கதேசத்தை வீழ்த்தினால் 8 புள்ளிகள் பெற்று 3ஆம் இடத்துக்கு முன்னேறிவிடும். கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா விளையாடுகிறது. 

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் தோல்வியடைந்தால் முடிந்தது கதை. 6 புள்ளிகளுடன் போட்டியிலிருந்து வெளியேறிவிடும். 7 புள்ளிகள் வைத்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும். அந்த அணி ஆரம்பத்தில் நியூசிலாந்தையும் இங்கிலாந்தையும் அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தியது. அதன் பலனைத் தற்போது அனுபவித்து வருகிறது. 

இல்லாவிட்டால் இன்று போல மழை பெய்தால் ஒரு புள்ளியைப் பெறும் இந்தியா, நல்ல ரன்ரேட்டைக் கொண்டிருப்பதால்  7 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். இந்தப் புதிய நெருக்கடியை இந்திய வீராங்கனைகள் எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை