இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடினால் டி20 உலகக்கோப்பை வாய்ப்பை பெறுவேன் - குல்தீப் யாதவ்

Updated: Thu, Jun 17 2021 10:33 IST
Image Source: Google

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, அடுத்தமாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இத்தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் மும்பையிலுள்ள பிசிசிஐ விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இத்தொடருக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் குல்தீப் யாதவ் இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. மேலும் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக விளையாடிவரும் குல்தீப் நடப்பாண்டில் ஒரு போட்டியில் கூட அணியில் இடம்பெறவில்லை.

இதனால் அவருக்கு இனி இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், இலங்கை அணிக்கெதிரான தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் டி20 உலகக்கோப்பைகான இந்திய அணியில் இடம்பெறுவேன் என குல்தீப் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய குல்தீப் யாதவ், “நான் கடந்த சில மாதங்களாக அணியில் இடம்பெறாமலிருப்பது குறித்து அதிகம் யோசித்து வருகிறேன். ஆனால் கிரிக்கெட் என்பது ஒரு அணி விளையாட்டு. அதனால் நீங்கள் உங்கள் தலைமைகளுக்கு கட்டுப்பட்டாக வேண்டும்.

மேலும் இந்த விளையாட்டில் நீங்கள் உங்கள் வாய்ப்புகாக காத்திருந்து, கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நீங்கள் இந்த விளையாட்டில் நீடிக்க முடியும். 

தற்போது நான் இலங்கை தொடருக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் நான் இத்தொடரில் எனது திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ஒருவேளை இலங்கை மற்றும் ஐபிஎல் தொடர்களில் நான் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் டி20 உலகக்கோப்பைகான இந்திய அணியில் இடம்பெறுவேன் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

இந்திய அணிக்காக இதுவரை 7 டெஸ்ட், 63 ஒருநாள், 21 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள குல்தீப் யாதவ் 170 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை