‘நான் பதற்றமாக இருந்தேன்’ - ரன் சேஸிங் குறித்து டேவிட் மில்லர்!
ஐபிஎல் போட்டியின் குவாலிஃபயா்-1 ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வென்று முதல் அணியாக ஃபைனல்ஸ்க்கு முன்னேறியுள்ளது.
இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் அதிரடி வீரர் டேவிட் மில்லர் கடைசிவரை களத்தில் நின்றதுடன், கடைசி ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்சர்களை பறக்கவிட்டு அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
நேற்றையப் போட்டியில் 38 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து குஜராத் அணியின் வெற்றிக்குப் பங்களித்ததால் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
போட்டி முடிந்தபின் பேசிய மில்லர்,“உண்மையில் எனக்கு சிறுது பதற்றமாகத்தான் இருந்தது. ஆனால் ஹார்திக், வழக்கமான கிரிக்கெட் ஷாட் மட்டும் அடிக்கவும் முடிந்தளவு ஆட்களில்லாத பகுதிகளில் அடிக்கவும் எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார்.
அவரால் ( ஹார்திக்) வேகமாக ஓட முடியவில்லை. எனக்கு ஓடுவது பிடித்திருந்தது. சேஷிங்கைப் பொறுத்தவரை ஹார்திக் பாண்டியா அமைதியான பொறுப்பான வீரராக திகழ்கிறார். என் மீது நம்பிக்கை வைத்து எனக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்து வரும் அணியின் நிர்வாகத்திற்கு எனது நன்றிகள்.
எனக்குக் கொடுக்கப்பட்ட ரோலில் நான் சிறப்பாக விளையாடி வருகிறேன். நிறைய வருடங்கள் விளையாடி வருவதால் ஆட்டத்தை நன்கு புரிந்து வைத்துள்ளேன்” என ரன் சேஸிங் குறித்து கூறினார்.