தோனி, சிஎஸ்கேவை கடுமையாக விமர்சித்த ஹர்பஜன் சிங்!

Updated: Mon, May 06 2024 14:09 IST
தோனி, சிஎஸ்கேவை கடுமையாக விமர்சித்த ஹர்பஜன் சிங்! (Image Source: Google)

தரம்சாலாவில் உள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.

இதில் அதிகபட்சமாக ரவீந்திர் ஜடேஜா 43 ரன்களையும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்களையும் சேர்த்தனர். பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ராகுல் சஹர் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.  இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ரூசோ என இருவரும் துஷார் தேஷ்பாண்டேவின் ஒரே ஓவரில் விக்கெட்டை இழந்தனர்.

அதன்பின் களமிறங்கிட ஷஷாங் சிங் 27 ரன்களையும்,  பிரப்சிம்ரன் சிங் 30 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் சிஎஸ்கே அணி 28 ரன்களில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் ஜடேஜா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி 9ஆம் இடத்தில் களமிறங்கியதுடன், முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் மகேந்திர சிங் தோனி 9ஆவது வீரராக பேட்டிங் செய்ய களமிறங்கியதை முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் மிக கடுமையாக விமர்சித்தும் பேசியுள்ளார்.

 

இதுகுறித்து பேசிய அவர், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோனி 9வது வீரராக களமிறங்கியதை என்னால் ஏற்று கொள்ளவே முடியாது. தோனி 9வது இடத்தில் தான் களமிறங்க வேண்டும் என்றால் அவருக்கு பதிலாக கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு டீமில் இடம் கொடுப்பது சென்னை அணிக்கு பயனளிக்கும். ஏனெனில் தோனி 9வது இடத்தில் களமிறங்குவதால் சென்னை அணிக்கு எந்த பயனுமே கிடைக்க போவது இல்லை.  பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோனிக்கு முன்பாக ஷர்துல் தாகூர் எதற்காக களமிறகப்பட்டார். 

ஷர்துல் தாகூரால் ஒரு போதும் தோனியை போன்று அதிரடியாக விளையாட முடியாது, தோனி அடிக்கும் ஷாட்களை ஷர்துல் தாகூரால் அடிக்கவே முடியாது. அப்படி இருக்கும் போது முடிவு எடுக்கும் இடத்தில் இருக்க கூடிய தோனி எதற்காக தனக்கு முன்பாக ஷர்துல் தாகூரை பேட்டிங் செய்ய அனுப்ப வேண்டும். நான் எனக்கு எது சரி என தோன்றுகிறதோ அதை மட்டும் தான் பேசுவேன், என்னை பொறுத்தவரையில் தோனி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 9வது இடத்தில் களமிறங்கியது பெரும் தவறு” என்று விமர்சித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை