நீங்க ஒருத்தர் கிட்ட வம்பிழுத்தா, நாங்க சும்மா விடமாட்டோம் - கே.எல்.ராகுல் ஆக்ரோஷம்1!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனைப்படைத்தது.
அதிலும் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் ஒன்பதாவது விக்கெட்டிற்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்நிலையில் அவர்கள் பேட்டிங் செய்யும் போது இங்கிலாந்து வீரர்கள் மார்க் வுட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் பும்ராவிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.
இதனால் போட்டி பரபரப்பானது. இந்த சம்பவத்திற்கு பிறகுதான் பும்ரா - ஷமி ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்த இந்திய அணிக்கு புது உத்வேகமளித்தனர்.
இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய இந்திய வீரர் கே.எல். ராகுல், “இரு பலமான அணிகள் மோதும் போது இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது சகஜம் தான். எங்களுக்கும் போட்டியின் போது இதுபோன்று சற்று வார்த்தைப் போரில் ஈடுபடுவது பிடிக்கும்.
ஆனால் எங்களின் அணியில் ஒருவரை நீங்கள் தாக்கினாலோ, பேசினாலோ மீதமிருக்கும் 10 பேரும் அவருக்கு பக்கபலமாக நின்று பதிலடி கொடுப்போம். அதனால் தான் நாங்கள் பந்துவீசும் போது உத்வேகத்துடனும், ஆக்ரோஷத்துடனும் இருந்தோம். அதனாலேயே எங்களால் வெற்றி பெற முடிந்தது” என தெரிவித்தார்.