ஐஎல்டி20 2024: சதத்தை தவறவிட்ட ஜான்சன் சார்லஸ்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வாரியர்ஸ் வெற்றி!

Updated: Tue, Jan 23 2024 11:52 IST
Image Source: Google

ஐஎல்டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ஷார்ஜா வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஷார்ஜா வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - கேப்டன் டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 15 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் டேவிட் வார்னரும் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஜேக் ஃபிரெசர் மெக்குர்க் 14 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த சாம் பில்லிங்ஸ் - சிக்கந்தர் ரஸா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டிற்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைந்தனர். பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிக்கந்தர் ரஸா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 48 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 

இதையடுத்து களமிறங்கிய ரோவ்மன் பாவெல் வெறும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் பில்லிங்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் ஒரு பவுண்டரி, 4 சிக்சர்கள் என 52 ரன்கள் எடுத்த நிலையில் சாம் பில்லிங்ஸும் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் துபய் கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களைச் சேர்த்தது. ஷார்ஜா அணி தரப்பில் டேனியல் சம்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஷார்ஜா வாரியர்ஸ் அணியின் டாப் ஆர்டர்கள் வீரர்கள் மார்ட்டின் கப்தில் 2 ரன்களிலும், டாம் கொஹ்லர் காட்மோர் 3 ரன்களிலும், நிரோஷன் டிக்வெல்லா 7 ரன்களுக்கும், லூயிஸ் கிரிகோரி 16 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரர் ஜான்சன் சார்லெஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். 

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சார்லெஸ் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 93 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பசிம் ஹமீத் - டேனியல் சம்ஸ் இணை அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் துபாய் கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை