ஐஎல்டி20: அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியில் டெசர்ட் வைப்பர்ஸ் அசத்தல் வெற்றி
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் இன்டர்நேஷ்னல் லீக் டி20 கிரிக்கெட் தொடர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் - டெசர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற டெசர்ஸ்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் தொடக்க வீரர் லூயிஸ் ரன் ஏதுமின்றியும், டேவிட் மாலன் 18 ரன்களிலும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 22 ரன்களிலும், கொஹ்லர் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் மொயீன் அலியும் 18 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த டென்லி - முகமது நபி ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களைச் சேர்த்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டென்லி 36 ரன்களையும், முகமது நபி 34 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை துரத்திய டெசர்ட் வைப்பர் அணியில் முஸ்தபா 8, கேப்டன் காலின் முன்ரோ ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ் - சாம் பில்லிங்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் அரைசதம் கடக்க, மறுமுனையில் சாம் பில்லிங்ஸ் 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த அலெக்ஸ் ஹேல்ஸ் 83 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.
இதன்மூலம் டெசர்ட் வைப்பர்ஸ் அணி 16.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் ஷார்ஜா வாரியார்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.