தமக்கு 35 வயது தான் ஆகியுள்ளதே தவிர 75 வயது ஆகவில்லை - ஷெல்டன் ஜாக்சன் வேதனை!
இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டில் அனைத்து துறைகளிலும் அளவு கடந்த போட்டி இருப்பது சாதாரணமான ஒன்றாகும். குறிப்பாக கிரிக்கெட்டில் ரஞ்சி கோப்பையிலேயே 38 அணிகளை சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டி போடுவதால் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்காக விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் 1 இடத்திற்கு ஏராளமான வீரர்கள் போட்டி போடுவது சகஜமாகி விட்டது.
அதனால் சில வீரர்கள் திறமை இருந்தும் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டும் அதிர்ஷ்டம் இல்லாததால் புறக்கணிக்கப்படுகிறார்கள். அதைவிட தற்போதைய நவீன கிரிக்கெட்டில் 30 வயதை தாண்டிவிட்டால் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு அவ்வளவுதான் என்ற எழுதப்படாத விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
அதிலும் சீனியர் அணியில் இடம் பெற்று சிறப்பாக செயல்பட்டு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த முகமது சமி, ஷிகர் தவான் போன்ற வீரர்கள் 30 வயதை தாண்டி விட்டதால் வெளிப்படையாகவே அவர்களுக்கு டி20 அணியில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அவர்களை விட 30 வயதை தாண்டி விட்டதால் இந்தியாவுக்காக மொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைக்கும் வாய்ப்பை கிட்டதட்ட இழந்த ஒரு வீரர் தான் ஷெல்டன் ஜாக்சன் ஆவார்.
சௌராஷ்டிராவைச் சேர்ந்த இவர் கடந்த 2006 முதல் ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் கிரிக்கெட்டிலும் 2009 முதல் ஐபிஎல் தொடரிலும் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவுடன் விளையாடி வருகிறார். இதில் ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டாலும் ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரில் இதுவரை 76 போட்டிகளில் 5734 ரன்களை 49.42 என்ற நல்ல சராசரியில் எடுத்து வருகிறார்.
ஒரு காலத்தில் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு தான் இந்திய அணியில் முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால் தற்போதெல்லாம் ஒருசில ஐபிஎல் சீசன்களில் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்வுக்குழு தேர்வு செய்வதை பார்க்க முடிகிறது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் இவர் இதுபற்றி அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக்குழுவிடம் கேள்வி எழுப்பிய போது உங்களுக்கு 30 வயதாகிவிட்டது என்பதால் வாய்ப்பு கொடுக்க முடியாது என்று கூறியதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
அந்த நிலைமையில் விரைவில் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி பங்கேற்கும் கிரிக்கெட் தொடருக்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் பெங்களூருவில் நடைபெறும் அந்த தொடரில் பிரியங் பஞ்சால் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ருதுராஜ் கைக்வாட், குல்தீப் யாதவ், சர்பராஸ் கான், கேஎஸ் பரத், ராகுல் சஹர், பிரஸித் கிருஷ்ணா, உம்ரான் மாலிக் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சீனியர் டெஸ்ட் அணியில் நிலையற்ற வாய்ப்புகளைப் பெற்று விளையாடி வரும் ஹனுமா விஹாரி ஒதுக்கப்பட்டுள்ளார்.
அவரை விட கடந்த 3 ரஞ்சி கோப்பை சீசன்களில் கிட்டத்தட்ட 2000 ரன்களை அடித்து நம்பிக்கையுடன் காத்திருந்த ஷெல்டன் ஜாக்சன் மீண்டும் தேர்வு செய்யப்படவில்லை. அதைவிட விரைவில் நடைபெறும் துலிப் கோப்பைக்கான மேற்கு மண்டல அணியிலும் அவர் தேர்வு செய்யப்படாதது அவருடைய நெஞ்சை உடைத்துள்ளது என்றே கூறலாம்.
சர்வதேச கிரிக்கெட்டில் எத்தனையோ வீரர்கள் 30 வயதுக்கு பின்பு தான் அபாரமாக செயல்பட்டு வயது வெறும் நம்பர் என்று நிருபித்துள்ளார்கள். அப்படிபட்ட நிலையில் வெறும் வயதை வைத்து உள்ளூர் கிரிக்கெட்டில் கூட விளையாட தனக்கு தகுதியில்லை என்று நினைக்கும் இந்திய தேர்வுக்குழு மற்றும் நிர்வாகத்தை சாடியுள்ள செல்டன் ஜாக்சன் தமக்கு 35 வயது தான் ஆகியுள்ளதே தவிர 75 வயது ஆகவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த 3 சீசன்களாக தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டதை வைத்து நம்பிக்கையும் கனவும் காண்பதற்கு நான் உரிமை பெற்றுள்ளேன். ஒருவேளை எனது வயதை பார்க்காமல் செயல்பாடுகளைப் பார்த்திருந்தால் நான் தேர்வாகியிருப்பேன். நான் நல்ல வீரர், சிறப்பாக செயல்படுபவர் என்பதை கேட்டு கேட்டு சோம்பலடைந்து விட்டேன். ஆனால் நான் வயதாகி விட்டேன், இருப்பினும் நான் 35 மட்டுமே 75 கிடையாது” என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.