இந்திய அணியில் தேர்வுசெய்வார்கள் என்பதற்கான இதனை நான் செய்யவில்லை - பிரித்வி ஷா!
இந்திய கிரிக்கெட்டில் சச்சின் மற்றும் சேவாக் ஓய்வு காலத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்த கலவையாக பிரித்வி ஷா இருப்பார் என்று பல முன்னாள் வீரர்களும் கணித்திருந்தார்கள். இதற்கு ஏற்றார் போல அவருடைய ஆரம்ப காலமும் இந்திய கிரிக்கெட்டில் மிக அமர்க்களமாக இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இந்திய மண்ணில் அறிமுகமான பிரித்வி ஷா, அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார்.
ஆனால் அதற்குப் பிறகு அவர் பேட்டிங் தொழில்நுட்பத்தில் இருந்த சில கோளாறு மற்றும் ஊக்க மருந்து பிரச்சனையில் அவருக்கு ஓராண்டு தடை என அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி விட்டது. இந்த நிலையில் அவருக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரும் நன்றாக அமையவில்லை. எனவே அவர் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஒன்டே கப் தொடரில் கவுண்டி அணியான நார்த்தாம்டன்ஷைர் அணிக்கு விளையாட ஒப்பந்தமாகி விளையாடிக் கொண்டு வருகிறார்.
இந்த நிலையில்தான் அவர் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுன்டி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சோமர்செட் அணிக்கு எதிராக நேற்று 153 பந்துகளில் 244 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இதனை அடுத்து மீண்டும் இந்திய அணிக்குள் ப்ரித்வி ஷா என்று அவரைப் பிடித்தவர்களின் குரல்கள் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.
தற்பொழுது இது குறித்து பேசியுள்ள பிரித்வி ஷா “நிச்சயம் இங்கு ஒரு அனுபவம் கிடைக்கும். நான் உண்மையில் இந்திய தேர்வாளர்கள் என்னை இந்திய அணியில் தேர்வு செய்வார்களா என்றெல்லாம் நினைக்கவில்லை. நான் இங்கு என்னுடைய நேரத்தை மிக நல்ல முறையில் கழிக்க விரும்புகிறேன். எனக்கு இங்கு வீரர்களுடனும் அணி ஊழியர்களுடனும் நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது. நான் இவற்றை அனுபவித்து வருகிறேன். சூரியன் வெளியே வந்து இந்திய சூழ்நிலை போலவே இருந்தது. ஒரு இன்சைட் எட்ஜில் நான் அவுட் ஆகாத போதே உங்களுக்கு தெரியும் அதாவது இன்றைய நாள் என்னுடைய நாள் என்று.
விளையாட்டில் நீங்கள் சில நேரங்களில் அதிர்ஷ்டசாலியாகவும் இருக்க வேண்டும். எனவே இது எனக்கான நாள் என்று நினைக்கிறேன். அது அமைந்த உடன் நான் திரும்பிப் பார்க்கவில்லை. நான் எப்பொழுதும் எனது அணிக்காக விளையாடக்கூடியவன். நான் எனது அணியை முதலில் வைத்து அதற்காக ஓடும் வகையான வீரர். இதுபோன்ற ஸ்கோர்கள் எனது அணியை வெற்றி பெற வைத்தால் நான் தொடர்ந்து இப்படி செயல்பட்டாக வேண்டும்” என்று மிகவும் உருக்கமாக கூறியிருக்கிறார்.