மாஸ்டர்ஸ் லீக் 2025: இங்கிலாந்து மாஸ்டர்ஸை பந்தாடியது இந்தியா மாஸ்டர்ஸ்!
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 2025 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நவி மும்பையில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் மற்றும் இந்தியா மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா மாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு கேப்டன் ஈயன் மோர்கன் - மஸ்டர்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மஸ்டர்ட் 8 ரன்களில் விக்கெட்டை இழக்கம், அவரைத்தொடர்ந்து ஈயான் மோர்கனும் 14 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஆம்ப்ரோஸ் - மட்டி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஆம்ப்ரோஸ் 23 ரன்களிலும், மட்டி 25 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களில் டிம் பிரஸ்னன், கிறிஸ் ட்ரெம்லெட் ஆகியோர் 16 ரன்களையும், கிறிஸ் ஸ்கோஃபீல்ட் 18 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களைச் சேர்த்தது. இந்திய மாஸ்டர்ஸ் அணி தரப்பில் தவால் குல்கர்னி 3 விக்கெட்டுகளையும், அபிமன்யூ மிதுன் மற்றும் பவன் நெகி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா மாஸ்டர்ஸ் அணிக்கு குர்கீரத் சிங் மற்றும் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தியது. அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சச்சின் டெண்டுல்கர் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 34 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் குர்கீரத் சிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குர்கீரத் சிங் மான் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 63 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய யுவராஜ் சிங் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 27 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 11.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.