ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி வருகிறேன் - ஷிகர் தவான்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்கவுள்ளது. மேலும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் ரோஹித் தலைமையிலான இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியை சீனியர் வீரர் ஷிகர் தவான் வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 36 வயதான ஷிகர் தவான் கடந்த 2010 முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி சார்பில் விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் தொடர்களில் இந்திய அணிக்காக அதிக ரன்களை குவித்து கொடுக்கும் வீரர் இவர். இதுவரை 34 டெஸ்ட், 158 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் தவான் விளையாடி உள்ளார்.
அதன் மூலம் 10,721 ரன்கள் குவித்துள்ளார். அண்மை காலமாக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து வருகிறது.
இந்த சூழலில்தான் எதிர்வரும் 2023 உலகக் கோப்பைக்கு தான் ஃபிட்டாக இருக்க விரும்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசிய அவர், “மிகவும் அற்புதமான கிரிக்கெட் கரியர் எனக்கு அமைந்துள்ளது. அதனால் நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என எண்ணுகிறேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் கற்றதையும், பெற்றதையும் இளம் வீரர்கள் வசம் பகிர்ந்து கொள்வேன். எனக்கு சில புதிய வாய்ப்புகளும் வந்துள்ளன. அதனை நான் சவாலாக எடுத்துக் கொள்கிறேன். அதை அனுபவிக்கவும் செய்கிறேன்.
இப்போதைக்கு எனது இலக்கு எல்லாம் இதுதான். வரும் 2023 உலகக் கோப்பைக்கு என்னை முழு உடற்தகுதி உடன் வைத்துக் கொள்வது. நல்ல மனநிலையில் நானும் அதற்கான போட்டியில் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்” என தவான் தெரிவித்துள்ளார்.