‘டிராவிட் எனக்கு நிறைய சுதந்திரம் கொடுக்கிறார்’- தனது அதிரடி குறித்து சூர்யகுமார் யாதவ் ஓபன் டாக்!
இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் ஆக சூர்யகுமார் யாதவ் விளங்குகிறார். கடந்த ஆறு மாதத்தில் மட்டும் மூன்று முறை டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசி சூரியகுமார் யாதவ் அசத்தியிருக்கிறார்.
அது மட்டுமல்ல தொடக்க வீரர் அல்லாமல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மூன்று சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையும் அவர் படைத்திருக்கிறார். நேற்றைய ஆட்டத்தில் கூட மற்ற வீரர்கள் சற்று தடுமாறினாலும் ராகுல் திரிபாதி, சூரியகுமார் யாதவ் மட்டும்தான் அதிரடியாக விளையாடினார்கள். இந்த வெற்றியின் ரகசியம் என்ன என்பது குறித்து சூரியகுமார் யாதவிடம் ஹர்ஷா பொக்ல கேள்வி கேட்டார்.
அதற்கு பதிலளித்த சூர்யகுமார் யாதவ், “விளையாட்டுக்குத் தயாராகும் போது, அதிக அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். அதை நடைமுறைப்படுத்தினால், மைதானத்தில் அழுத்தமான சூழலில் விளையாடும்போது ஆட்டம் கொஞ்சம் எளிதாகிவிடும். அவ்வளவு எளிதல்ல. நிறைய கடின உழைப்பு தேவை. உங்கள் விளையாட்டின் பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை நீங்கள் அறிந்து அதற்கேற்ப தயாராக வேண்டும். அதைத்தான் நான் செய்தேன்.
நான் அதிகளவு ஸ்டம்பின் பின்னால் அடிப்பதற்கு காரணம், அங்கு எல்லைகள் 50-60 மீட்டர்கள் மட்டுமே இருக்கின்றன. அதனால் நான் அங்கே குறிவைத்தேன். சில பந்திற்கு ஏற்றவாறு சில ஷாட்கள் உள்ளன. ஆனால் நீங்கள் மற்ற ஷாட்களையும் வைத்திருக்க வேண்டும். பந்துவீச்சாளர்கள் தனது திட்டத்தை மாற்றி வித்தியாசமான பந்துகளை வீசினால், அப்போது தக்கபதிலடி கொடுக்க முடியும்.
டிராவிட் எனக்கு நிறைய சுதந்திரம் கொடுக்கிறார். அழுத்தம் எடுக்க வேண்டாம். மைதானத்திற்குள் சென்று உன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் போதும் என்பார். அதைத்தான் நான் செய்து, அனைவரையும் மகிழ்விக்கிறேன் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.