இஷான் கிஷன் தமக்கு கிடைத்த வாய்ப்பை பிடித்துக் கொண்டார் - கேஎல் ராகுல்!
வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.இளம் வீரர் இஷான் கிஷன் 210 ரன்கள் விளாச விராட் கோலி தனது 44 வது சர்வதேச ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.
இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 409 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து வங்கதேச அணி 182 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து படுதோல்வையை தழுவியது.
இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய கேப்டன் கே எல் ராகுல், “இது போன்ற செயல்பாட்டை தான் இந்திய அணியிடம் இருந்து அனைவரும் எதிர்பார்த்து இருப்பார்கள். விராட் கோலியும், இஷான் கிஷனும் எங்களுக்கு இந்த வெற்றியை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். எப்போதும் ஸ்கோர் போர்டு நாங்கள் எப்படி ஆட்டத்தை தொடங்கினோம் என்று சொல்லாது. இஷான் கிஷன் தமக்கு கிடைத்த வாய்ப்பை தனது இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டார்.
இஷான் கிஷன் விளையாடிய விதம் பிரமிக்கும் வகையில் இருந்தது. விராட் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர் களத்தில் நின்று அவருக்கு வழி நடத்தினார். நாங்கள் இமாலய இலக்கை நிர்ணயித்ததால் எதிரணி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவார்கள் என்று எங்களுக்கு தெரியும். அதன் மூலம் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்று நாங்கள் யோசித்தோம். ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்களுக்கு போதிய உதவி இல்லை.
ஆனால் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டார்கள். இந்த தொடரில் நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதை ஒரு அணியாக கற்றுக் கொண்டோம் . இன்னும் சில இடங்களில் எங்கள் அணியில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. முதல் இரண்டு ஆட்டத்திலும் நாங்கள் சிறு தவறுகள் செய்ததால் எங்களுக்கு சாதகமான முடிவை நாங்கள் பெறவில்லை.
தற்போது எப்படி ஆடுகளத்தில் விளையாட வேண்டும் என்பது புரிந்து விட்டது.இந்த வெற்றி எங்களுக்கு நிச்சயம் நல்ல உத்வேகத்தை கொடுக்கிறது. இன்னும் மூன்று நாட்களில் டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. இந்த வெற்றி நிச்சயம் அந்த தொடரிலும் நாங்கள் சிறப்பாக விளையாட கை கொடுக்கும். டெஸ்ட் தொடரில் நல்ல உத்வேகத்துடன் வங்கதேச அணியை எதிர்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.