ஆடுகளம் இவ்வளவு கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை - டெம்பா பவுமா!

Updated: Thu, Sep 29 2022 09:49 IST
Image Source: Google

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி கேரளாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணியில் கேசவ் மஹராஜ் 41, பர்னல் 25 மற்றும் மார்கரம் 24, ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி, ஒற்றை இலக்க ரன்னை கூட தாண்டாததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்ரிக்கா அணி 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஸ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஹர்சல் பட்டேல் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதன்பின் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா  ரன் ஏதுமின்றியும், விராட் கோலி 3 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், கே.எல் ராகுல் 51, மற்றும் சூர்யகுமார் யாதவ் 50 ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கின் மூலம் 16.4 ஓவரில் இலக்கை எட்டிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தநிலையில், இந்திய அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனான டெம்பா பவுமா, ஆடுகளத்தின் தன்மை இந்த அளவிற்கு கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெம்பா பவுமா பேசுகையில், “பேட்டிங்கில் நாங்கள் எங்களது வேலையை சரியாக செய்ய தவறிவிட்டோம். ஆடுகளத்தின் தன்மை மிக கடினமாக இருந்தது, ஆடுகளம் பந்துவீச்சிற்கு சாதகமாவும், சற்று கடினமாகவும் இருக்கும் என நினைத்தோம், ஆனால் இந்த அளவிற்கு இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 

ஓரளவிற்காவது போதுமான ரன்கள் எடுத்தால் மட்டுமே பந்துவீச்சாளர்களாலும் அதனை கட்டுப்படுத்த முடியும், எங்கள் பந்துவீச்சாளர்கள் தங்களால் முடிந்தவரை மிக சிறப்பாக செயல்பட்டனர். கடைசி நேரத்தில் பேட்டிங்கில் ஓரளவிற்கு சிறப்பாக செயல்பட்டோம், அது மட்டுமே இந்த போட்டியில் எங்களுக்கு சாதகமான விசயம்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை