SA vs IND, 2nd Test: ஷர்துல் தாக்கூர் அபாரம்; சறுக்கலில் தென் ஆப்பிரிக்கா!

Updated: Tue, Jan 04 2022 16:11 IST
IND v SA: Shardul Thakur's Triple Strike Sends South African Top Order Packing (Image Source: Google)

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் ஜொஹன்னஸ்பர்க்கில் திங்கள் அன்று தொடங்கியது.

இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. காயம் காரணமாக இந்த டெஸ்டிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். இதனால் கே.எல். ராகுல் கேப்டனாகக் களம் இறங்கினார். டாஸ் வென்ற ராகுல், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் கோலிக்குப் பதிலாக ஹனுமா விஹாரி தேர்வானார். தெ.ஆ. அணியில் ஓய்வு பெற்ற டி காக்குக்குப் பதிலாக கைல் வெரீனும் முல்டருக்குப் பதிலாக ஆலிவியரும் தேர்வானார்கள்.  

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ராகுல் 50, அஸ்வின் 46 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. தரப்பில் ஜேன்சன் 4 விக்கெட்டுகளும் ரபாடா, ஆலிவியர் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். முதல் நாள் முடிவில் தெ.ஆ. அணி 18 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்தது. எல்கர் 11, பீட்டர்சன் 14 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இன்று ஆட்டம் தொடங்கிய பிறகு எல்கரும் பீட்டர்சனும் பொறுப்புடனும் நிதானமாகவும் விளையாடி இந்திய அணிக்குச் சிக்கலை ஏற்படுத்தினார்கள். ஷமியும் பும்ராவும் எவ்வளவு முயன்றும் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. நேற்று பீட்டர்சன் அளித்த கேட்சை நழுவ விட்டார் ரிஷப் பந்த். அதற்கான விளைவுகள் இன்று தெரிந்தன. 

ஆனால் ஷர்துல் தாக்குர் பந்துவீச ஆரம்பித்த பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. தனி ஆளாக ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். 120 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்த எல்கரை முதலில் வீழ்த்தினார் ஷர்துல் தாக்குர்.

அதன்பின் 103 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் அரை சதத்தை எட்டினார் பீட்டர்சன். 118 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த பீட்டர்சனும் ஷர்துல் தாக்குரின் பந்தில் வீழ்ந்தார். உணவு இடைவேளைக்கு முந்தைய கடைசி ஓவரில் வான் டர் டுசென்னையும் வீழ்த்தி இந்திய அணிக்குப் பெரிய திருப்புமுனையை இந்த டெஸ்டில் ஏற்படுத்தினார் ஷர்துல் தாக்குர்.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி, உணவு இடைவேளையின்போது 44.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது. பவுமா ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்க அணி, 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 100 ரன்கள் பின்தங்கியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை