SA vs IND, 2nd Test: தொடரை வெல்லுமா இந்தியா!

Updated: Wed, Jan 05 2022 19:10 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையான இரண்டாவது டெஸ்ட் ஜொஹன்னஸ்பர்க்கில் திங்கள் அன்று தொடங்கியது.

இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ராகுல் 50, அஸ்வின் 46 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. தரப்பில் ஜேன்சன் 4 விக்கெட்டுகளும் ரபாடா, ஆலிவியர் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். தென் ஆப்பிரிக்கா அணி முதல் 20இன்னிங்ஸில் 229 ரன்கள் எடுத்தது. 

இந்திய அணி 2ஆம் நாள் முடிவில் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்தது.

நேற்றிரவு மாலையில் எப்படி விளையாடினார்களோ அதேபோல இன்றும் புஜாராவும் ரஹானேவும் விரைவாக ரன்கள் எடுத்தார்கள். முதல் 10 ஓவர்களில் இருவரும் 52 ரன்களை எடுத்தார்கள். இதனால் இந்திய அணி 100 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்றது.

62 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார் புஜாரா. 10 பவுண்டரிகள். மிகவும் வித்தியாசமான ஆட்டத்தை இன்று அவர் வெளிப்படுத்தினார். புஜாரா - ரஹானே கூட்டணி 3ஆவது விக்கெட்டுக்கு 122 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்தது. ரஹானே 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 67 பந்துகளில் அரை சதம் எட்டினார். இந்திய அணியின் ஸ்கோர் 150 ரன்களைத் தாண்டியது. இந்திய ரசிகர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருந்த நேரத்தில் ரபாடா அவர்களுடைய கனவைக் கலைத்தார்.

58 ரன்கள் எடுத்த ரஹானே, ரபாடாவின் பந்தில் ஆட்டமிழந்தார். தனது அடுத்த ஓவரில் புஜாராவை 53 ரன்களில் வீழ்த்தினார் ரபாடா. ஒரு ரன்னும் எடுக்காத ரிஷப் பந்த் மோசமான ஷாட்டை விளையாடி ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். 2 பவுண்டரிகள் அடித்த அஸ்வின் 16 ரன்களில் என்கிடி பந்தில் ஆட்டமிழந்தார். 

இந்திய அணி 3-வது நாள் உணவு இடைவேளையின்போது 44 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு 4 விக்கெட்டுகள் மட்டுமே மீதமிருந்த நிலையில் 161 ரன்கள் முன்னிலை பெற்றது. விஹாரி 6, ஷர்துல் தாக்குர் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

உணவு இடைவேளைக்குப் பிறகு 24 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்துக் கொடுத்தார் ஷர்துல் தாக்குர். அடுத்ததாக ரன் எதுவும் எடுக்காமல் ஜான்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ஷமி. பும்ரா ஒரு சிக்ஸர் அடித்து 7 ரன்களில் என்கிடி பந்தில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார் விஹாரி. இந்திய அணி 225 ரன்கள் முன்னிலை பெற பெரிதும் உதவினார். சிராஜ் ரன் எதுவும் எடுக்காமல் கடைசியில் இங்கிடி பந்தில் ஆட்டமிழந்தார். 

இந்திய அணி 60.1 ஓவர்களில் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. விஹாரி ஆட்டமிழக்காமல் 6 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாடா, இங்கிடி ஜான்சன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2ஆவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற 240 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை