IND vs SL, 2nd Test (Day 2, Dinner): அதிவேக அரைசதம் அடித்து பந்த் சாதனை!

Updated: Sun, Mar 13 2022 18:44 IST
IND v SL: Pant Fires As India Build Lead Of 342 Runs (Image Source: Google)

இந்தியா - இலங்கை இடையே பெங்களூருவில் நடந்துவரும் பகலிரவு (2வது) டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் அடித்தது. இந்திய அணியில் அபாரமாக பேட்டிங் ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் 92 ரன்களை குவித்தார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, பும்ராவின் பவுலிங்கில் சரணடைந்தது. அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்களில் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஆட்டமிழக்க, 109 ரன்களுக்கே சுருண்டது இலங்கை அணி. இந்திய அணி சார்பில் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

143 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டனும் மற்றொரு தொடக்க வீரருமான ரோஹித் சர்மா சிறப்பாக பேட்டிங் ஆடி 46 ரன்கள் அடித்து 4 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். ஹனுமா விஹாரி 35 ரன்னிலும், விராட் கோலி 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

5ஆம் வரிசையில் இறங்கிய ரிஷப் பந்த், களத்திற்கு வந்தது முதலே அடித்து ஆடி ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடிய ரிஷப் பண்ட் 28 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்தார் ரிஷப் பந்த். ஆனால் அரைசதம் அடித்த மாத்திரத்தில் 50 ரன்களிலேயே அவுட்டும் ஆனார். இதையடுத்து ஸ்ரேயாஸுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.

28 பந்தில் அரைசதம் அடித்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ரிஷப் பண்ட். இதற்கு முன்பாக கபில் தேவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 பந்தில் அரைசதம் அடித்ததே, இந்திய வீரர் அடித்த அதிவேக அரைசதமாக இருந்துவந்தது. இந்நிலையில், கபில் தேவின் சாதனையை தகர்த்துள்ளார் ரிஷப் பந்த். இந்த பட்டியலில் 31 பந்தில் அரைசதம் அடித்த ஷர்துல் தாகூர் 3ஆம் இடத்தில் உள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை