IND vs AFG, 3rd T20I: ரோஹித் சர்மா மிரட்டல் சதம்; ஆஃப்கானுக்கு 213 டார்கெட்!
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டி கொண்ட டி20 தொடரில் முதல் 2 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. மொகாலியில் நடந்த முதல் போட்டி மற்றும் இந்தூரில் நடந்த 2ஆவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. இதில் அதிரடி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதனைத்தொடர்ந்து கடந்த இரண்டு போட்டிகளிலும் அரைசதம் விளாசிய ஷிவம் தூபே இப்போட்டியில் ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சனும் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தவறி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்த ரிங்கு சிங் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார்.
அதன்பின் இருவரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா அரைசதம் கடந்து அசத்த, இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியது. அதன்பின் வழக்கம்போல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்ம சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அவருக்கு துணையாக விளையாடிய ரிங்கும் சிங்கும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோஹித் சர்மா 11 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 121 ரன்களையும், ரிங்கு சிங் 2 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 69 ரன்களையும் சேர்த்து மிரட்டினர். இதன்மூலம் 5ஆவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப்பாக இருவரும் இணைந்து 190 ரன்களை குவித்தனர்.
இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களைச் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அறிமுக வீரர் ஃபரீத் அஹ்மத் மாலிக் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளது.