IND vs NZ, 1st Test Day 3: அஸ்வின், அக்ஸர் அபாரம்; இந்திய அணி தடுமாற்றம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 345 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 129 ரன்களைச் சேர்த்திருந்தது. இதில் டாம் லேதம் 50 ரன்களுடனும், வில் யங் 75 ரன்களுடனும் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
இதில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வில் யங் 89 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், ஹென்றி நிக்கோலஸ் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த டாம் லேதம் 95 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து, சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் வந்த வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.
இதனால் மூன்றாம் நாள் முடிவுக்கு முன்னதாகவே நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் 51 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மயங்க் அகர்வால் - புஜாரா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 14 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணியில் மயங்க் அகர்வால் 4 ரன்களுடனும், புஜாரா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.