IND vs SA, 1st ODI: மில்லர், கிளாசென் அரைசதம்; இந்தியாவுக்கு 250 டார்கெட்!

Updated: Thu, Oct 06 2022 19:01 IST
Image Source: Google

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி லக்னோவில் நன்று நடைபெற்று வருகிறது. 

இப்போட்டிக்கு முன்னதாக மழை பெய்த காரணத்தினால் டாஸ் தாமதமாகப் போடப்பட்டு, போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்பின் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார்.

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஜென்மான் மாலன் - குயின்டன் டி காக் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மாலன் 22 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த டெம்பா பவுமா, ஐடன் மார்க்ரம் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதன்பின் மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குயின்டன் டி காக் 48 ரன்கள் எடுத்த நிலையில் அறிமுக வீரர் ரவி பிஸ்னோயிடம் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹென்ரிச் கிளாசென் - டேவிட் மில்லர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் 200 ரன்களைத் தாண்டியது. அவர்களது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய இருவரும் கடைசி வரை களத்தில் இருந்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதன்மூலம் 40 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 249 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த் டேவிட் மில்லர் 75 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 74 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை