IND vs SA, 1st T20I: தென் ஆப்பிரிக்காவை 106 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி கேரளாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு டி காக்கும், டெம்பா பவுமாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இப்போட்டியின் முதல் ஓவரை வீசிய தீபக் சஹார் அபாரமாக பந்துவீசி தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமாவின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
இப்போட்டியின் இரண்டாவது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், தனது முதல் ஓவரிலேயே தென் ஆப்ரிக்கா வீரர்கள் பயத்தை காட்டியதோடு, அதிரடி ஆட்டக்காரரான டி காக்கின் விக்கெட்டை முதல் ஓவரிலேயே கைப்பற்றி அசத்தினார்.
அடுத்தடுத்து களமிறங்கிய ரூசோவ் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரையும் அர்ஸ்தீப் சிங் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றி அசத்தினார். இதனால் தென் ஆப்ரிக்கா அணி 9 ரன்களுக்கே 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
இதையடுத்து களமிறங்கிய ஐடன் மார்க்ரம் சிறிது நேரம் தாக்குபிடித்து 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து கொடுத்ததார். அதன்பின் அவரும் ஆட்டமிழந்து வெளியேற இறுதியில் கேஷாவ் மஹாராஜ் - வெய்ன் பார்னெல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மஹாராஜ் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 41 ரன்கள் சேர்த்து ஹர்ஷல் படேலிடம் விக்கெட்டை இழந்தார். இறுதில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், தீபக் சஹார், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.