தென் ஆப்பிரிக்காவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த கேஷவ் மஹாராஜ்!
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கெய்ர்னில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தென் ஆப்பிரிக்காவை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணியில் ஐடன் மார்க்ரம் 82 ரன்களையும், கேப்டன் டெம்பா பவுமா 65 ரன்களையும், மேத்யூ பிரீட்ஸ்கி 57 ரன்களையும் சேர்க்க அந்த அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 296 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்டுகளையும், பென் துவார்ஷுயிஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மிட்செல் மார்ஷ் 88 ரன்களையும், பென் துவார்ஷுயிஸ் 33 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேசவ் மகாராஜ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் உள்ளது.
இந்த போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேசவ் மஹாராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றதுடன் சிறப்பு சாதனையையும் படைத்துள்ளார். இந்த போட்டியில் கேஷவ் மஹாராஜ் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றிய போது சர்வதேச கிரிக்கெட்டில் தனது 300ஆவது விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம், தென் ஆப்பிரிக்காவின் 136 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் சுழற்பந்து வீச்சாளர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.
இதுதவிர்த்து இந்த மைல் கல்லை எட்டும் எட்டாவது தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன் தென் ஆப்பிரிக்காவுக்காக இதுநாள் வரை ஷான் பொல்லாக், டேல் ஸ்டெய்ன், மக்காயா நிடினி, ஆலன் டொனால்ட், ககிசோ ரபாடா, ஜாக் காலிஸ் மற்றும் மோர்ன் மோர்கெல் ஆகியோர் மட்டுமே இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளனர். இதில் அனைவருமே வேகப்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
தென் ஆப்பிரிக்காவுக்காக அதிக சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்கள்
- கேசவ் மகாராஜ் - 304 விக்கெட்டுகள்
- இம்ரான் தாஹிர் - 291 விக்கெட்டுகள்
- நிக்கி போஜே - 196 விக்கெட்டுகள்
- ஹக் டேஃபீல்ட் - 170 விக்கெட்டுகள்
- தப்ரைஸ் ஷம்சி - 168 விக்கெட்டுகள்