IND vs SA, 1st T20I: மில்லர், வெண்டர் டுசென் காட்டடி; இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!

Updated: Thu, Jun 09 2022 22:28 IST
Image Source: Google

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த இஷான் கிஷன், கேஷவ் மஹராஜின் ஒரே ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் பறக்கவிட்டார். அந்த ஒரே ஓவரில் ஸ்கோரை மளமளவென உயர்த்திவிட்டார்.

48 பந்தில் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் இஷான் கிஷன். ஸ்ரேயாஸ் ஐயர் அடித்து ஆடி 27 பந்தில் 36 ரன்கள் அடித்தார். ரிஷப் பண்ட் 16 பந்தில் 29 ரன்கள் அடித்தார். டெத் ஓவர்களில் அடித்து ஆடிய ஹர்திக் பாண்டியா 12 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 31 ரன்கள் அடித்தார் பாண்டியா. 

இஷான் கிஷனின் அதிரடி அரைசதம், ஹர்திக் பாண்டியாவின் காட்டடி ஃபினிஷிங்கால் 20 ஓவரில் 211 ரன்களை குவித்து, 212 ரன்கள் என்ற கடின இலக்கை தென்ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது.

பின்னர் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் டெம்பா பவுமா 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த டி காக் - டுவைன் பிரிட்டோரியஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதன்பின் 29 ரன்களில் பிரிட்டோரியஸ் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 22 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ரஸ்ஸி வெண்டர்டுசென் - டேவிட் மில்லர் இணை ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.

அதன்பின் அதிரடியில் மிரட்டிய டேவிட் மில்லர் வாணவேடிக்கை காட்டினார். இதன்மூலம் 22 பந்துகளில் அரைசதமும் விளாசி அணிக்கு நம்பிக்கையளித்தார். அதுவரை பொறுமையாக விளையாடிய வெண்டர் டுசென், ஹர்ஷல் படேல் வீசிய 17ஆவது ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்சர், ஒரு பவுண்டரியை விளாசி தனது அதிரடியைக் காட்டி அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மில்லர் 64 ரன்களையும், வெண்டர் டுசென் 75 ரன்களையும் சேர்த்து வெற்றிக்கு உதவினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை