அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங்; வார்னிங் கொடுத்த அம்பையர்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய வீரர் ஆர்ஷ்தீப் சிங் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 106 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அதிலும் இத்தொடரில் புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில், பும்ராவும் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இந்த நிலையில், ஆர்ஸ்தீப் சிங்கும், தீபக் சாஹரும் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
குறிப்பாக ஆர்ஷ்தீப் சிங் வீசிய 2ஆவது பந்தில் குயின்டன் டி காக் விக்கெட்டையும், 5ஆவது பந்தில் ரூஸ்சோ விக்கெட்டையும், கடைசி பந்தில் டேவிட் மில்லரின் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் மூலம் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை ஆர்ஸ்தீப் சிங் கைப்பற்ற தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்தது.
இந்த நிலையில், எப்போதும் டேத் ஓவரில் 2 ஓவர்களை ஆர்ஸ்தீப் சிங் வீசுவார். ஆனால், அவர் பவர்பிளேவில் சிறப்பாக பந்துவீசியதால், ரோஹித் சர்மா கூடுதலாக ஒரு ஓவரை பவர்பிளேவில் வீசுமாறு வழங்கினார். அப்போது பந்துவீசிய ஆர்ஷ்தீப் சிங் பந்து வீசிய பிறகு ஆடுகளத்திற்கு நடுவே வந்து தனது ஓட்டத்தை முடித்தார்.
இதனை பார்த்த நடுவர், ஆர்ஷ்தீப் சிங்கை எச்சரித்தார். எப்போதும் ஸ்டம்பிற்கு நேராக உள்ள இடத்தில் எந்த வீரரும் காலை வைக்க கூடாது. பந்துவீச்சாளர்கள் அந்த இடத்தில் ஓடினால் நடுவர் ஒரு எச்சரிக்கை கொடுப்பார். தொடர்ந்து அந்த தவறை செய்தால், அந்த பவுலர் அதன் பிறகு எஞ்சிய ஓவர்களை அந்த ஆட்டத்தில் வீச முடியாது. இந்த விதியின் காரணமாக, ஆர்ஸ்தீப் சிங் கொஞ்சம் பதற்றம் அடைந்து, பிறகு ஆடுகளத்திற்கு நடுவே வராத வகையில் ஓடினார்.
ஸ்டம்பிற்கு நேராக இருக்கும் ஆடுகளத்தின் அந்த இடத்தை அபாயகரமான பகுதி என்பார்கள். அதற்கு காரணம், அங்கு ஷு காலுடன் ஓடினால், அது ஆடுகளத்தை சேதப்படுத்தும். இதனால் பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர்கொள்ளும் போது, பந்து அந்த இடத்தில் பட்டால் பந்து கணிக்க முடியாத வகையில் செயல்படும். இது காரணமாக தான் கிரிக்கெட்டில் இப்படி ஒரு விதி உள்ளது குறிப்பிடத்தக்கது.