IND vs SA, 3rd T20I: ரூஸோவ் அதிரடி சதம்; இந்தியாவுக்கு 228 டார்கெட்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் வழக்கம் போல கேப்டன் டெம்பா பவுமா இன்றைய தினமும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த குயின்டன் டி காக் - ரீலே ரூஸோவ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் டி காக் கடந்த போட்டியில் விட்ட இடத்திலிருந்தே தனது அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்தார். அதேசமயம் கடந்த இரண்டு போட்டிகளாக டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பிய ரூஸோவ், இப்போட்டியில் முதல் பந்திலிருந்தே அதிரடி காட்டத்தொடங்கினார்.
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் இப்போட்டியிலும் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 68 ரன்களில் டி காக் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய ரூஸோவ் 26 பந்துகளில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ரூஸோவுடன் ஜோடி சேர்ந்த ஸ்டிரிஸ்டன் ஸ்டப்ஸும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிலே ரூஸோவ் 48 பந்துகளில் சதம் விளாசி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
பின் 23 ரன்களில் ஸ்டப்ஸ் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் அடுத்தடுத்து 3 சிக்சர்களை விளாசி ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் 20 ஓவர்கல் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களைச் சேர்த்தது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிலே ரூஸோவ் 100 ரன்களுடன் களத்தில் இருந்தார்.