IND vs SA, 3rd T20I: இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது தென் ஆப்பிரிக்கா!

Updated: Tue, Oct 04 2022 22:41 IST
Image Source: Google

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி முதல் முறையாக இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்று சாதனை படைத்தது.

இந்நிலையில், இன்று இந்தூரில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. கேஎல் ராகுல், விராட் கோலி, அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவருக்கும் ஓய்வளிக்கப்பட்டு ஸ்ரேயாஸ் ஐயர், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டனர்.

முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான டெம்பா பவுமா மீண்டும் சொதப்பினார். வெறும் 3 ரன்னில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். இந்தூர் மைதானம் மிகச்சிறியது. அதைப்பயன்படுத்தி டி காக் மற்றும் ரூஸோவ் ஆகிய இருவரும் அடித்து ஆடினர். இந்திய பவுலிங்கை பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அடித்து நொறுக்கினார். 

அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த குயின்டன் டி காக் 43 பந்தில் 68 ரன்களை குவித்து ரன் அவுட்டாகி வெளியேறினார். டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் இந்தூரில் சிக்ஸர் மழை பொழிந்த ரூஸோவ் 48 பந்தில் சதமடித்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 48 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 100 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

டேவிட் மில்லர் கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசி முரட்டுத்தனமாக முடித்து கொடுக்க, 20 ஓவரில் 227 ரன்களை குவித்த தென் ஆப்பிரிக்க அணி 228 ரன்கள் என்ற கடின இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது.

அதன்பின் இலக்கை துரத்திய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது பந்திலேயே ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் சொற்ப ரன்களோடி பெவிலியனுக்கு திரும்பினார். 

பின்னர் ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் - தினேஷ் கார்த்திக் இணை பவுண்டரி மழை பொழிந்தனர். இதில் 27 ரன்களில் ரிஷப் பந்த் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 4 சிக்சர், 4 பவுண்டரிகள் என 46 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 

அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 8, அக்ஸர் படேல் 9, ஹர்ஷல் படேல் 17, ரவிச்சந்திரன் அஸ்வின் 2 என வந்த வேகத்தில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த தீபக் சஹார் - உமேஷ் யாதவ் இணை அதிரடியாக விளையாடி பவுண்டரிகளாக விளாசினர்.

பின் 31 ரன்களுடன் தீபக் சஹார் விக்கெட்டை இழந்தார். இறுதியில் சிராஜ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 18.3 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை