IND vs SL, 1st ODI: இந்திய அணிக்கு 263 ரன்களை இலக்காக நிர்ணயித்த இலங்கை!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்களாக இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவும், இலங்கை அணியில் பனுகா ராஜபக்ஷவும் இடம்பிடித்தனர்.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு அவிஷ்கா ஃபெர்னாண்டோ - மினோத் பானுகா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் 32 ரன்கள் எடுத்திருந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோ சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மினோத் பனுகா, பனுகா ராஜபக்ஷ ஆகியோரது விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் தசுன் ஷானகா - அசலங்கா இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் இருவரும் அரைசதம் கடப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அசலங்கா 38 ரன்களிலும், தசுன் ஷானகா 38 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் இறுதியில் அதிரடியாக விளையாடிய கருணரத்னே கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார்.
இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், தீபக் சஹார் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.