IND vs SL, 1st Test (Day 2 Tea): ஜடேஜா அபாரம்; 574 ரன்களில் இந்தியா டிக்ளர்!
இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 45 ரன்களுடனும், ரவிச்சந்திரன் அஸின் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஜடேஜாவும் அஸ்வினும் இணைந்து அபாரமாக விளையாடினர். ஜடேஜா சிறப்பாக ஆட, அஸ்வின் அடித்து ஆடி வேகமாக ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அஸ்வின் அரைசதம் அடிக்க, ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 2ஆவது சதத்தை பதிவு செய்தார். இருவரும் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 130 ரன்களை குவித்தனர்.
பின்னர் அரைசதம் அடித்த அஸ்வின் 61 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 500 ரன்களை நெருங்கியது. பின்னர் ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த முகமது ஷமி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தவிர்த்தார்.
மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய ஜடேஜா 150 ரன்களை கடந்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்மூலம் இரண்டாம் நாள் தேநீர் இடைவேளைக்கு முன்னதாக இந்திய அணி 574 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது.
இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 175 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இலங்கை அணி தரப்பில் சுரங்கா லக்மல், விஷ்வா ஃபெர்னாண்டோ, லசித் எம்பல்தெனியா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.