இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலில் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த், அஸ்வின் ஆகியோரது அபாரமான ஆட்டத்தினால் இரண்டாம் நாள் தேநீர் இடைவேளை முன்னதாக 8 விக்கெட்டுகளை இழந்து 574 ரன்களில் டிக்ளர் செய்தது.
இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 175 ரன்களுடன் ஆட்டமிழக்கமால் இருந்தார். மேலும் ரிஷப் பந்த் 96 ரன்களையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 61 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் மிகப்பெரும் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் திமுத் கருணரத்னே - லஹிரு திரிமானே இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
அதன்பின் 17 ரன்கள் எடுத்திருந்த திரிமானே அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அதைத்தொடர்ந்து 28 ரன்கள் சேர்த்திருந்த கருணரத்னே, ரவீந்திர ஜடேஜா வீசிய 2ஆவது பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஏஞ்சலோ மேத்யூஸ் - பதும் நிஷங்கா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். பின் மேத்யூஸ் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தனஞ்செய டி சில்வா ஒரு ரன்னோடு நடையைக் கட்டினார்.
இதன்மூலம் 2ஆம் நாள் ஆட்ட்நேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களைச் சேர்த்துள்ளது. அந்த அணியில் பதும் நிஷங்கா 26 ரன்களுடனும், சரித் அசலங்கா ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளது.
இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், பும்ரா, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனால் 466 ரன்கள் பின் தங்கிய நிலையில் இலங்கை அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.