IND vs SL, 2nd T20I: நிஷங்கா அதிரடி அரைசதம்; இந்தியாவுக்கு 184 டார்கெட்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் பதும் நிஷங்கா - தனுஷ்கா குணத்திலகா இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கிய குணத்திலகா, ஜடேஜா வீசிய 9ஆவது ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரியை விளாசினார். அதன்பின் 4ஆவது பந்தையும் சிக்சர் விளாச முடிவு செய்த குணத்திலகா, வெங்கடேஷ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய சரித் அசலங்கா, கமில் மிஸ்ரா, தினேஷ் சண்டிமல் ஆகியோர் வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிஷங்கா அரைசதம் அடித்து அசத்தினார். அவருடன் இணைந்த கேப்டன் தசுன் ஷனகாவும் அதிரடியில் மிராட்டினார்.
அதன்பின் 75 ரன்களைச் சேர்த்த பதும் நிஷங்கா, புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைச் சேர்த்தது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இலங்கை கேப்டன் தசுன் ஷனகா 47 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.