IND vs SL, 2nd Test (Day 3, Tea): வெற்றியை நெருங்கும் இந்திய அணி!

Updated: Mon, Mar 14 2022 16:18 IST
IND vs SL, 2nd Test (Day 3, Tea): Indian bowlers drop Sri Lankan batting! (Image Source: Google)

இந்தியா - இலங்கை இடையே பெங்களூருவில் நடந்துவரும் பகலிரவு (2வது) டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் அடித்தது. இந்திய அணியில் அபாரமாக பேட்டிங் ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் 92 ரன்களை குவித்தார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, பும்ராவின் பவுலிங்கில் சரணடைந்தது. அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்களில் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஆட்டமிழக்க, 109 ரன்களுக்கே சுருண்டது இலங்கை அணி. இந்திய அணி சார்பில் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

143 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் மீண்டும் ஷ்ரேயாஸ் ஐயர் அபாரமாக பேட்டிங் ஆடினார். அதிரடியாக ஆடி 28 பந்தில் அரைசதம் அடித்த ரிஷப் பண்ட் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக பேட்டிங் ஆடி 2வது இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். 303 ரன்களுக்கு 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்ததையடுத்து, 447 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை இலங்கை அணி விரட்டுகிறது.

அதன்படி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிவரும் இலங்கை அணி இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இதில் கேப்டன் திமுத் கருணரத்னே - குசால் மெண்டிஸ் இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர். பின் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குசால் மெண்டீஸ் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்செயா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இதனால் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இலங்கை அணி 151 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 

இதனால் இலங்கை அணி வெற்றிபெற இன்னும் 296 ரன்கள் தேவைப்படுகிறது. அதேசமயம் இந்திய அணி வெற்றிக்கு 6 விக்கெட்டுகள் தேவையாக உள்ளது. இதனால் இப்போட்டியின் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை