INDA vs NZA, 3rd ODI: ஷர்துல் காட்டடி; நியூசிலாந்து ஏ-வை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா ஏ!
நியூசிலாந்து ஏ அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களிலும் 3 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடியது. ஒருநாள் தொடர் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இத்தொடரின் முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் தலைமையிலான இந்திய ஏ அணி வெற்றிபெற்று தொடரை வென்று அசத்தியது. இந்நிலையில் இத்தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய இந்திய ஏ அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் 54 ரன்கள், திலக் வர்மா 50 ரன்கள் எடுத்தார்கள். ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குர் 33 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இருப்பினும் இந்திய ஏ அணி 49.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து ஏ தரப்பில் ஜேகப் டஃபி, மேத்யூ ஃபிஷர், ரிப்பன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திய நியூசிலாந்து ஏ அணி, முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்தாலும் பிறகு தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் தடுமாறியது. விக்கெட் கீப்பர் பேட்டர் டேன் கிளெவர் நன்கு விளையாடி 83 ரன்கள் எடுத்தார்.
ஆனால் அதன்பின் களமிறங்கிய வீரர்கள் நியூசிலாந்து வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் ஏ அணி 38.3 ஓவர்களில் 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இந்திய அணி தரப்பில் ராஜ் பவா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் இந்திய ஏ அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து ஏ அணியை வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.