IND vs SL: புவனேஷ்வர் குமார் வேகத்தில் சரிந்த இலங்கை; இந்தியா அபார வெற்றி!

Updated: Sun, Jul 25 2021 23:41 IST
Image Source: Google

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச தீர்மானித்தது. 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இதில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்தார். 

இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 50 ரன்களையும், ஷிகர் தவான் 48 ரன்களையும் சேர்த்தனர். 

அதன்பின் இலக்கை துரத்திய இலங்கை அணியில் மினோத் பானுகா 10 ரன்னிலும், தனஞ்செய டி சில்வா 9 ரன்னிலும், அவிஷ்கா ஃபெர்னாண்டோ 26 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் அதிரடியாக விளையாடி சரித் அசலங்காவும் 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். 

அதைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் இந்திய அணி பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறினர். இதனால் 18.3 ஓவர்கள் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தாரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதன் மூலம் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியதோடு, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை