ஐசிசி உலகக்கோப்பை 2023: முகமது ஷமி அபாரம்; இங்கிலாந்தை வழியனுப்பியது இந்தியா!

Updated: Sun, Oct 29 2023 21:34 IST
Image Source: Google

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷுப்மன் கில் 9 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி ரன்கள் ஏதுமின்றியும், ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இந்திய அணி 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் ரோஹித் சர்மாவுடன் இணைந்த கேஎல் ராகுலும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரோஹித் சர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் மறுபக்கம் 39 ரன்கள் எடுத்த நிலையில் கேஎல் ராகுல் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 87 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதனைத்தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுப்பக்கம் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 8 ரன்களிலும், முகமது ஷமி ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் அரைசதத்தை நெருங்கிய சூர்யகுமார் யாதவும் 49 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இறுதியில் ஜஸ்ப்ரித் பும்ரா 16 ரன்களையும், குல்தீப் யாதவ் 9 ரன்களையும் சேர்க்க 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. இதில் அதிரடியாக தொடங்கிய டேவிட் மாலன் 16 ரன்கள் எடுத்த நிலையில் டேவிட் மால் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே ஜோ ரூட்டும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸும் டக் அவுட்டாகி வெளியேற, மற்றொரு தொடக்க வீரரான ஜானி பேர்ஸ்டோவும் 14 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து இணைந்த ஜோஸ் பட்லர் - மொயீன் அலி இணை ஓரளவு தாக்குபிடித்து ரன்களை சேர்க்க முயற்சித்தாலும் பட்லர் 10 ரன்களுக்கும், மொயீன் அலி 15 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் 27 ரன்களை எடுத்து விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

இதனால் இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், தொடர்ச்சியாக தங்களது 6ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை