ENG vs IND, 2nd T20I: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இங்கிலாந்து - இந்தியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி சௌத்தாம்ப்டனில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2ஆவது டி20 போட்டி எட்ஜ்பாஸ்டனில் இன்று நடந்துவருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் எதிர்பார்க்கப்பட்டதை போலவே, கடந்த போட்டியில் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்கள் அணிக்குள் நுழைந்ததால் இளம் வீரர்கள் அணியில் இடத்தை இழந்தனர். கோலி அணிக்குள் வந்ததால் தீபக் ஹூடா நீக்கப்பட்டார். ஜடேஜா மற்றும் பும்ரா அணிக்கு திரும்பியதால் அக்ஸர் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் நீக்கப்பட்டனர்.
ரிஷப் பந்த் அணிக்குள் வந்ததால் இஷான் கிஷன் நீக்கப்பட்டு, ரோஹித்துடன் ரிஷப் பந்த் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார்.
அத்னபடி முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இருவரும் அதிரடியாக தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 4.5 ஓவரில் 49 ரன்களை சேர்த்தனர். ரோஹித் சர்மா 20 பந்தில் 31 ரன்களும், ரிஷப் பண்ட் 15 பந்தில் 26 ரன்களும் அடித்தனர்.
விராட் கோலி மீண்டும் ஒருமுறை சொதப்பி, இந்த போட்டியிலும் ஒரு ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். சூர்யகுமார் யாதவ் 15 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தினேஷ் கார்த்திக்(12), ஹர்ஷல் படேல்(13) ஆகியோரும் ஏமாற்றமளித்தனர்.
ஆனால் ஜடேஜா அதிரடியாக ஆடி டெத் ஓவர்களில் பொறுப்புடன் நின்று முடித்து கொடுத்ததால் 20 ஓவரில் இந்திய அணி 170 ரன்கள் அடித்தது. ஜடேஜா 29 பந்தில் 46 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய், புவனேஷ்வர் குமார் வீசிய முதல் பந்திலேயே நடையைக் கட்டினார். அதன்பின் 5 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் ஜோஸ் பட்லரும் புவனேஷ்வர்குமாரிடம் வீழ்ந்தார்.
அதன்பின் களமிறங்கிய டேவிட் மாலன் 19, ஹாரி ப்ரூக் 8, லியாம் லிவிங்ஸ்டோ 15 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஆனாலும் 6 விக்கெட்டுக்கு களமிறங்கிய மொயின் அலி அதிரடியாக விளைடாடி 35 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்களும் இந்திய அணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் 17 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், சஹால், பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது.