IND vs SL: கரோனா அச்சுறுத்தலால் ஒருநாள் தொடரின் தேதி மாற்றம்? 

Updated: Fri, Jul 09 2021 21:59 IST
Image Source: Google

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, அங்கு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

ஜூலை 13ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. அதன்படி  2ஆவது,  3ஆவது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23, 25ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த போட்டிகள் அனைத்து கொழும்புவில் உள்ள பிரேமதசா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய இலங்கை அணியில் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர் மற்றும் அந்த அணியின்  தரவு பகுப்பாய்வாளர் ஷிராந்தா நிரோஷனா ஆகிய இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

எனினும், முதல் கட்ட சோதனையில் வீரர்கள் எவருக்கும் கரோனா உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்ட சோதனையில் வீரர்கள் சிலருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. 

இந்த சூழலில், தங்கள் வீரர்களுக்கான தனிமைப்படுத்துதல் காலத்தை மேலும் நீட்டிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஜுலை 13ஆம் தேதி தொடங்கவிருந்த ஒருநாள் தொடர், ஜுலை 17 அல்லது 18ஆம் தேதி தொடங்கப்படலாம் என்று தகவலும் வெளியாகியுள்ளது. 

போட்டி அட்டவணை மாற்றப்படுவது குறித்த முறையான தகவலை நாளை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் முறைப்படி அறிவிக்கும் என்றும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை