இவரை போன்ற வீரரை இந்திய அணி இதற்கு முன் பெற்றிருக்கவில்லை - கவுதம் கம்பீர்!

Updated: Mon, Nov 07 2022 09:25 IST
Image Source: Google

டி20 உலக கோப்பையில் இந்திய அணி சிறப்பாக ஆடி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தென் ஆப்பிரிக்காவிடம் மட்டுமே தோற்றது. பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய 4 அணிகளையும் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி இந்த உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை பெற பேட்டிங்கில் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவின் பங்களிப்புதான் முக்கிய காரணம்.

கடைசி 2 போட்டிகளில் ராகுல் நன்றாக விளையாடினார். ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் சரியாக பேட்டிங் ஆடவில்லை. விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் தான் இந்தியாவிற்காக இந்த உலக கோப்பையில் சிறப்பாக பேட்டிங் விளையாடி வருகின்றனர். அவர்களைத்தான் இந்திய அணி பேட்டிங்கில் அதிகம் நம்பியும் சார்ந்தும் இருக்கிறது.

குறிப்பாக சூர்யகுமார் யாதவின் அதிரடியான பேட்டிங்கால் தான் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்கிறது. வித்தியாசமான ஷாட்டுகளை ஆடவல்லவர் சூர்யகுமார் யாதவ். பொதுவாக பவுலர்கள் டெத் ஓவர்களில் வீசுவதற்கென்றே சில பந்துகள் வைத்திருக்கின்றனர். ஸ்லோ யார்க்கர், ஸ்லோ அவுட் சைட் ஆஃப் யார்க்கர், ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே பந்தை வீசுவது ஆகியவைதான் டெத் ஓவர்களில் வீசுவதற்கு பவுலர்கள் வைத்திருக்கும் ஆப்சன்கள். இந்த மாதிரியான பந்துகளை ஆடுவதற்கு பெரும்பாலான சிறந்த பேட்ஸ்மேன்களிடம் ஷாட் இல்லை. ஆனால் சூர்யகுமார் யாதவிடம் இதுமாதிரியான பந்துகளை சிக்ஸர்கள் அடிப்பதற்குக்கூட ஷாட்டுகள் உள்ளன.

மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடியவர் சூர்யகுமார் யாதவ். அதனால் தான் இந்தியாவின் 360 என அழைக்கப்படுகிறார். எப்பேர்ப்பட்ட பந்தையும் ஃபீல்டர்கள் இல்லாத திசையில் பவுண்டரி அடிக்கவல்லவர். ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் ஆஃப் ஸ்டம்ப்பை விட்டு விலக்கி, கிட்டத்தட்ட வைட் லைனில் வீசப்பட்ட பந்தையெல்லாம் ஃபைன் லெக் மற்றும் ஸ்கொயர் லெக் திசைகளில் சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்தார். அதுமாதிரியான ஷாட்டுகளை அவரால் மட்டுமே ஆடமுடியும். 

இந்திய அணி இந்த உலக கோப்பையில் அரையிறுதியில் நன்றாக விளையாடி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி, அதிலும் நன்றாக விளையாடு வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டுமென்றால், சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடியாக வேண்டும். அவர்தான் இப்போதைக்கு இந்திய பேட்டிங் ஆர்டரில் மிக முக்கியமான வீரர்.

இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் குறித்து கருத்து கூறியுள்ள கவுதம் கம்பீர், “விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் மாதிரியான மரபார்ந்த ஷாட்களை ஆடும் சிறந்த வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் சூர்யகுமார் யாதவ் வித்தியாசமானவர். அவருடைய பேட்டிங்கை என்ஜாய் செய்ய வேண்டும். இவர் மாதிரியான வீரர் கிடைப்பது அரிது. 

இந்திய அணியில் இவர் மாதிரியான வீரர் இதற்கு முன் இருந்ததில்லை. அதுவும் 4ஆம் பேட்டிங் ஆர்டரில் இறங்கி 180 ஸ்டிரைக் ரேட்டில் 3 அரைசதங்களுடன் 200 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். என்னை பொறுத்தமட்டில் இந்த உலக கோப்பையின் தொடர் நாயகன் சூர்யகுமார் யாதவ் தான். ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.  பவர்ப்ளேயில் விளையாடும் வசதி அவருக்கு இல்லை. ஆனாலும் 180 ஸ்டிரைக் ரேட்டில் ஆடியிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை