பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நிலை குறித்து கவலை தெரிவித்த ஜுனைத் கான்!

Updated: Thu, May 06 2021 14:12 IST
India-Pakistan Matches Teaches Player How To Handle Pressure: Junaid Khan (Image Source: Google)

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஜுனைத் கான். இவர் இதுவரை 22 டெஸ்ட் போட்டிகளில் 190 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 76 ஒருநாள், 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால், 2019ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து ஜுனைத் கானை பாகிஸ்தான் அணி தேர்வு செய்யாமல் இருக்கிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெற வேண்டுமென்றால், கேப்டனுடனும், அணி நிர்வாகத்துடனும் நெருக்கமாகப் பழகி, தொடர்பில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வாய்ப்பு கிடைக்காது என்று ஜுனைத் கான் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய அவர், “கேப்டனுடனும், அணி நிர்வாகத்துடனும் நமக்கு நல்ல நட்பு தொடர்ந்தால், அனைத்து விதமான போட்டிகளிலும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும். நமது திறமையை நிரூபிக்கலாம். ஆனால், கேப்டனுடனும், நிர்வாகத்துடனும் நெருக்கமாக இல்லாவிட்டால், அணியிலிருந்து நீக்கப்படுவீர்கள். இதுதான் பாகிஸ்தான் அணியின் நிலைமை.

நான் பாகிஸ்தான் அணியின் 3 பிரிவுகளிலும் விளையாடினேன். ஆனால், நான் ஓய்வு கேட்காமல் எனக்கு நிர்வாகம் ஓய்வளித்துவிட்டது. என் மீதான திடீர் விருப்பு வெறுப்புகளால் என்னைத் தேர்வு செய்யவில்லை. எனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டபோதிலும் எனக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை.

2017ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி போட்டியில் ஹசன் அலிக்கு அடுத்து நான்தான் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தினேன். ஆனால், 2019ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து என்னை அணி நிர்வாகம் ஒதுக்கி வைத்துள்ளது.

நான் நம்பிக்கையை இழக்கவில்லை. தொடர்ந்து உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி வருகிறேன். நிச்சயம் மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை