கரோனா தொற்றால் வீராங்கனையின் தாய் உயிரிழப்பு; சோகத்தில் இந்திய அணி!

Updated: Wed, May 19 2021 16:50 IST
India player Priya Punia loses mother to Covid-19 (Image Source: Google)

இந்தியாவில் கரோனா பரவல் 2வது அலை தனது கோர முகத்தை காட்டி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பது போல் உயிரிழப்பவர்களில் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை பிரியா புனியாவின் தாய் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

இதுகுறித்து பிரியா புனியா தனது பதிவில், "நீங்கள் எப்போதும் என்னை ஏன் பலமாக இருக்கச் சொன்னீர்கள் என இன்று நான் உணர்ந்தேன். உங்களுடைய இழப்பைச் சுமக்க ஒரு நாள் எனக்கு வலிமை தேவை என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் உங்களை இழக்கிறேன் அம்மா! நீங்கள் எப்போதும் என்னுடன் இருப்பீர்கள்.

என் வழிகாட்டும் நட்சத்திரம், என் அம்மா. உங்களை எப்போதும் நேசிக்கிறேன். வாழ்க்கையில் சில உண்மைகளை ஏற்றுக்கொள்வது கடினம். உங்கள் நினைவுகள் ஒருபோதும் மறக்கப்படாது. தயவுசெய்து விதிகளைப் பின்பற்றி முன்னெச்சரிக்கைகள் எடுக்கவும். இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானது. மாஸ்க் அணியுங்கள், தனி நபர் இடைவெளியை கடைபிடியுங்கள், பாதுகாப்பாக இருங்கள், வலுவாக இருங்கள்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதில் சோகத்தை ஏற்படுத்தும் விஷயம் என்னவென்றால், இங்கிலாந்து செல்லும் இந்திய மகளிர் அணியில் பிரியாவும் இடம் பெற்றுள்ளார். இதற்காக, அவர் நாளை (மே.19) முதல் மும்பையில் இங்கிலாந்து தொடருக்கான பயோ - பபுளில் இணைய வேண்டும். இதற்கான அனைத்து பணிகளில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தான்,அவரது தாய் இறந்த சம்பவம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிரியா மற்ற வீராங்கனைகளுடன் இங்கிலாந்து தொடருக்கு செல்ல ஆயத்தமாகி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை