இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சாடும் முன்னாள் கேப்டன் ரணதுங்கா!
விராட் கோலி தலைமையில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.
அதனால் 3 டி20 , 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி சென்றுள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு இலங்கைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், தங்கள் ஏஅணியை இந்தியா இலங்கைக்கு அனுப்பியிருப்பதாகவும், அதை எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டு இலங்கை கிரிக்கெட் வாரியம் விளையாட சம்மதித்துள்ளதாகவும் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா விமர்சித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அர்ஜூனா ரணதுங்கா, இந்தியா தங்கள் ஏ அணியை இலங்கைக்கு அனுப்பியிருப்பது நமது கிரிக்கெட்டுக்கான(இலங்கை) அசிங்கம். வெறும் தொலைக்காட்சி மார்கெட்டிங்கிற்காக ஏ அணியுடன் ஆட சம்மதித்தது இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் தவறு. இதற்கு வேறு யாரையும் குற்றம்கூற முடியாது. வலுவான அணியை இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டு, பலவீனமான அணியை இலங்கைக்கு அனுப்பியுள்ளது இந்தியா. இது இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தவறுதான் என்று விமர்சித்துள்ளார்.