அசத்திய கிஷான், மிரட்டிய கோலி; இந்தியா அபார வெற்றி!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் ஜோஸ் பட்லர், டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோவ், ஈயான் மோர்கன் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். மறுமுனையில் அதிரடியாக விளையாடிவந்த ஜேசன் ராய் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து, வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் - இஷான் கிஷான் இணை தொடக்கம் தந்தது. இங்கிலாந்து தரப்பில் முதல் ஓவரை வீசிய சாம் கரன், ஓவரை மெய்டனாக்கியதோது ராகுலின் விக்கெட்டையும் கைப்பற்றி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி - இஷான் கிஷான் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய இஷான் கிஷான் எதிரணி பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு விளாசி அசத்தினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இஷான் கிஷான், 28 பந்துகளில் 4 சிக்சர், ஐந்து பவுண்டரிகளை விளாசி அரைசதத்தைக் கடந்தார். அதன்பின் 56 ரன்களை எடுத்திருந்த நிலையில் அதில் ரஷித்திடம் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ரிஷப் பந்த் தனது பங்கிற்கு ஒருசில பவுண்டரிகளை விளாசி 26 ரன்களை சேர்த்த கையோடு நடையைக் கட்டினார்.
மறுமுனையில் நிலைத்து விளையாடி வந்த கேப்டன் விராட் கோலி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 26ஆவது அரைசத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதனால் 18 ஓவர்களிலேயே இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.
மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 73 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.